சமையலறையில் மூணு மாசமா ஒண்ணும் இல்லைனு பார்த்ததில் இருந்து ஏதாவது பதிவு போடணும்னு கை துறுதுறுக்குது. அதனால் சிம்பிளா "பேல் பூரி".
தேவை:
அரிசி பொரி - 1 கப்
பெ. வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - கால் கப்
தக்காளி (பொடியாக நறுக்கியது) - கால் கப்
கேரட் (துறுவியது) - கால் கப்
ஓமப்பொடி - 2 மே.கரண்டி
காராபூந்தி - 2 மே.கரண்டி
உப்பு - சிறிதளவு
சட்னி செய்ய:
கொத்துமல்லி இலை - கைப்பிடி
புளி - நெல்லிக்காய் அளவு
வெல்லம் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 1
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 2
செய்முறை:
சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். பொரி, வெங்காயம், தக்காளி, கேரட் முதலியவற்றைக் கலக்கவும். இலேசாக உப்பு தூவிக் கொள்ளவும். இவற்றுடன் சட்னியைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின் ஓமப்பொடி, காராபூந்தி தூவவும். சிறிது உருளைக்கிழங்கு சிப்ஸும் உடைத்து சேர்க்கலாம்.
உடனே சாப்பிட பேல்பூரி தயார்.
Aug 17, 2009
பேல் பூரி
May 4, 2009
சிக்கன் பர்கர்
இப்ப குட்டீஸ்க்கு பிடிச்ச உணவெல்லாம் கான்சர் வரும் உடம்புக்கு நல்லதில்லைனு சொல்றதால வரிசையா வீட்ல அதை எல்லாம் எப்படி பண்றதுனு கத்துக்க வேண்டி இருக்கு. இப்ப வீட்ல லேட்டஸ்ட் அறிமுகம் "சிக்கன் பர்கர்"
தேவை:
பர்கர் பன் - 2
எலும்பில்லா கோழிகறி - 100கி
முட்டை (வெள்ளைக்கரு மட்டும்) - 1
வெங்காயம் - 4 துண்டு
பூண்டு - 2 பல்
உப்பு, மிளகு - சுவைக்கு
ரொட்டி துகள்
எண்ணெய்
செய்முறை:
பர்கர் பன்னை இரண்டாக வெட்டி, சிறிது வெண்ணெய்/நெய் விட்டு தோசைக்கல்லில் டோஸ்ட் செய்து கொள்ளவும்.
கோழிக்கறியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் முட்டை, வெங்காயம், பூண்டு, உப்பு, மிளகு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். இந்த கலவையை கையால் "கட்லட்" போல், அதாவது 1/2 அங்குல உயரத்திற்கு சிறிய வட்டமாக தட்டிக் கொள்ளவும். இதை ரொட்டித் துகளில நன்கு புரட்டி தோசைக்கல்லில் இருபக்கமும் நன்கு சிவக்கும் வரை டோஸ்ட் செய்யவும். இதை patty என்பார்கள்
டோஸ்ட் செய்த பர்கர் பன்னின் நடுவில் patty வைக்கவும்.இதனுடன் சாஸ் சேர்த்து சாப்பிடலாம் (அ) கீழே கூறியவாறு அலங்கரித்து/சுவைகூட்டி சாப்பிடலாம்.
அலங்கரிக்க:
தக்காளி துண்டுகள்
வெள்ளரி துண்டுகள்
செலரி
மயோனிஸ் - 1 தேக்கரண்டி
முட்டை கோஸ் துருவல்
ஒரு பர்கர் பன் மீது patty வைத்து, அதன் மீது தக்காளி, முட்டைகோஸ், செலரி, வெள்ளரி வைத்து மயோனிஸை அதன் மீது ஊற்றி மற்றொரு பர்கர் பன் வைக்கவும். இவை அனைத்தையும் ஒரு toothpick கொண்டு இணைக்கவும். சுவையான பர்கர் தயார்
Apr 3, 2009
தக்காளி ஊறுகாய்

1/2 கிலோ தக்காளியை ஒரளவுக்கு சன்னமான துண்டுகளா கட் செஞ்சுக்கோங்க. அதுல மஞ்சள்தூள், பெருங்காய்ம், புளி, கல் உப்பு எல்லாம் கொஞ்சமா போட்டு நல்லா பிரட்டி விட்டு வெயில வைச்சுடுங்க. ஒரு இரண்டு இல்லாட்டி மூணு நாள் நல்லா காய வைங்க. தக்காளியில இருக்கிற தண்ணி எல்லாம் வடிஞ்சு காயணும். பிறகு தக்காளியை மிக்சியில போட்டு வரமிளகாய் சேர்த்து நல்லா நைசா அரைக்கணும்.அப்புறம் நல்லெண்ணெய்ல கடுகு தாளிச்சு விட்டு தக்காளி விழுதை போட்டு அது கிளறுங்க. நல்லா கெட்டியா பாத்திரத்தில ஒட்டாம வரும்போது இறக்கி வெச்சுடுங்க. சாதத்துக்கு சைட் டிஷ்ஷா இல்லாம மெயின் ஐட்டமாவே இதை உபயோகிக்கலாம். இட்லி, தோசை, சப்பாத்திக்கு கூட சூப்பரா செட் ஆகும். ஒரு பதினைஞ்சு நாள் வரை வெச்சு உபயோகப்படுத்தலாம்.
இன்னும் ஒரு முறை
தக்காளியை சுடுதண்ணியில் போட்டு ஒரு ரெண்டு நிமிசம் வெச்சு இருந்து அப்புறம் எடுத்து தோல் எடுத்துடுங்க. அதோட மிளகாய்தூள், பூண்டு, உப்பு சேர்த்து அரைச்சு வைங்க. ஒரு வாணலியில பெரிய வெங்காயம் தாளிச்சு விட்டு அரைச்ச வெச்ச தக்காளி விழுது போட்டு அத்தோட கொஞ்சம் புளித்தண்ணி விட்டு நல்லா கெட்டியா வர்ற வரை கொதிக்க வைங்க. இதுவும் நல்லா இருக்கும். ஆனா ஒரு வாரம் வரைதான் இதை உபயோகிக்க முடியும்.
Mar 20, 2009
பாஸ்தா

வீட்டில் நூடுல்ஸுக்கு "நோ" சொல்லிவிட்டதால் , இப்ப குட்டீஸோட ஈர்ப்பு பாஸ்தா. விடுவோமா? எப்படி பண்றதுனு கத்துகிட்டு இப்ப வீட்டிலேயே அந்த ருசியைக் கொண்டு வந்தாச்சு. இப்ப குட்டீஸ் நூடுல்ஸை மிஸ் பண்றது இல்லை.
தேவை:
பாஸ்தா - 200g
மொசரல்லா சீஸ்
வைட் சாஸ் செய்ய:
வெண்ணெய் - 2 மே.கரண்டி
மைதா மாவு - 2 மே.கரண்டி
பால் - 2 கப்
ருசிக்கு
உப்பு
மிளகு
செய்முறை
பாஸ்தாவில் "பென்னெ", "மக்ரோனி" "பெளடைஸ்" என்று அதன் வடிவத்தைப் பொறுத்து பல பெயர்களில் கிடைக்கும். உங்கள் குட்டீஸுக்குப் பிடித்ததை தேர்வு செய்யுங்கள். பொதுவாக பாஸ்தாவை வேக வைக்கும் முறை குறிப்பிடப்பட்டிருக்கும். நல்ல கொதிக்கும் நீரில் பாஸ்தா போட்டு உப்பு மற்றும் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து 8-10 நிமிடங்கள் வேகவைத்து வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
வைட் சாஸ் செய்ய:
வாணலியில் வெண்ணையை உருக்கி, மைதா மாவைச் சேர்க்கவும், பின் பாலை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் எரிய விட்டு, கிளறிக் கொண்டே இருக்கவும். சற்று நேரத்தில் குமிழிகள் தோன்றும், சாஸும் சற்றே கெட்டியாகத் தொடங்கும். இப்பொழுது இறக்கி விடவும்.
சீஸைத் துருவிக் கொள்ளவும். பாஸ்தா, வைட் சாஸ், சீஸ் துருவலை சேர்த்து கலக்கவும். தேவையான உப்பு மற்றும் மிளகுத் தூள் (வெள்ளை மிளகு தூள் என்றால் நிறம் மாறாது) சேர்க்கவும். இதை அடுப்பில் ஒரு ஐந்து நிமிடம் மிதமான தீயில் வைக்கவும் (அ) மைக்ரோவேவ் அவனில் ஐந்து நிமிடம் வைத்து எடுக்கவும். சுவையான பாஸ்தா தயார்.
டிப்ஸ்
1. நான் உப்பு மிளகோடு துளசி இலைகளைத் தூள் செய்து flavor-க்கு சேர்த்தேன். இதை basil flavor என்கிறார்கள்.
2. மொசரல்லா சீஸ் போல் செடார் சீஸ் சேர்த்தும் செய்யலாம்
3. சிறிதளவு வொயிட் சாஸைத் தனியாக எடுத்து வைத்துவிட்டு பரிமாறும்பொழுது சேர்த்து பரிமாறினால் பாஸ்தா dry-ஆக இருக்காது
4. வொயிட் சாஸ் ரொம்ப கெட்டியாகி விட்டால் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக் கொள்ளலாம்
Mar 15, 2009
உருளைக்கிழங்கு சாகூ
ரம்யாவின் உருளைக்கிழங்கு சைடு டிஷ்!!
இந்த சைடு டிஷை பூரி, சப்பாத்தி, மற்றும் தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். மிகவும் அருமையா இருக்கும்.

தேவையான பொருட்கள்
================================
1. 4 உருளைக்கிழங்கு
2. 2 பெரிய வெங்காயம்
3. 3 நாட்டுத் தக்காளி
4. 10 பல் பூண்டு
5. இஞ்சி தேவையான அளவு
6. 2 பட்டை
7. 4 லவங்கம்
8. 2 டீஸ்பூன் மல்லிதூள்
9. 2 டீஸ்பூன் சீரகப்பொடி
10. மிளகாய்ப்பொடி தேவையான அளவு
11. மஞ்சள் தூள் தேவையான அளவு
12. உப்பு தேவையான அளவு
செய்முறை விளக்கம்
========================
உருளைக்கிழங்க நன்றாக வேகவைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
உரித்த உருளைக்கிழங்கில், ஒரு உருளைக்கிழங்கை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். மற்றவைகளை துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு சிறிது வதக்கியபின் அதனுடன் லவங்கம், பட்டை சேர்த்து சில விநாடிகள் வதக்கவும். பிறகு நறுக்கிவைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு மிளகாய் பொடியை சேர்க்கவும். வெங்காயம் சிறிதளவு வதங்கியவுடன் நறுக்கி வைத்திருந்த தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது எல்லாம் ஒன்று சேர்ந்து பொன்னிறமான கலவையாக மாறி இருக்கும்.
இந்த கலவையுடன் கொஞ்சம் போட்டு நன்றாக கொதிக்கவிடவும்.
பிறகு இதனுடன் தனியாக எடுத்து வைத்த ஒரு உருளைக்கிழங்கை நன்றாக மாவு போல் பிசைந்து இந்த வதங்கிய கலவையுடன் கலந்து சிறிது நேரம் கொத்திக்க வைக்கவேண்டும்.
கிரேவி சிறிது கெட்டியாக இருக்க இந்த பிசைந்த உருளைக்கிழங்கு உதவுகின்றது.
வெந்த கலவையை அழகான ஒரு பௌலில் எடுத்து, அதன் மேல் கொத்தமல்லி தளையை பொடியாக நறுக்கி அழகு படுத்தவும்.
Mar 6, 2009
க்விக் மோர்க்குழம்பு
ஒரு நாள் பரவை முனியம்மா டி.வியில ஒரு சமையல் சொல்லிக் கொடுத்தாங்க. பேரு மறந்துடுச்சு. எளிமையா இருக்கேனு செஞ்சு கொடுத்தனுப்பினால் "மோர்க்குழம்பு சூப்பர்" அப்படீனு பாராட்டு. அவசர சமையலுக்கு ருசியா ஒரு குழம்பு கிடைச்சது. .
தேவை:
புளிக்காத தயிர் - ஒரு கப்
வற்றல் மிளகாய் - 2
தேங்காய் - 1/4 கப்
மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு
எண்ணைய், சீரகம் - தாளிக்க
செய்முறை:தேங்காயை நன்கு வழுவழுவென்று அரைத்துக் கொள்ளவும். தயிரில் உப்பு மஞ்சள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இத்துடன் அரைத்த தேங்காயை சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காயவிட்டு சீரகத்தைப் பொரிய விடவும். பின் வற்றல் மிளகாயைக் கிள்ளி போடவும். இதனுடன் மோர் கலவையை சேர்க்கவும். நன்கு நுரை கூடி வரும் நேரம் தீயை அணைத்து விடவும். கமகம மோர்க்குழம்பு தயார். காய்கள் வேண்டுமென்றால் வேகவைத்து சேர்த்துக்கொள்ளலாம்.
எப்படி இருக்கு இந்த கிவிக் ரெசிபி?
Feb 24, 2009
சிக்கன் பிரை

தேவை:
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள்- 250கிராம்,
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்,
உப்பு- தேவையான அளவு,
காய்ந்த மிளகாய்- 10,
எண்ணெய்- தாளிக்க,
தனியா பொடி- 1/4 டீஸ்பூனிற்க்கும் குறைவாக.
செய்முறை:
கொஞ்சம் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு போட்டு கோழிக் கறியை நன்கு கழுவி விட்டு எலும்பில்லாதவாறு ஒரளவுக்கு பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் வானலியில் சிக்கனை பிரை செய்ய தேவையான அளவு எண்ணெயை ஊற்றிக் கொண்டு காய்ந்த மிளகாயை விதைகளுடன் உடைத்துப் போட்டு, பின் சிக்கன் துண்டுகளையும், மஞ்சள் தூளையும், தனியா பொடியையும், தேவையான உப்பையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கடைசியில் சிறிதளவு தண்ணீரை விட்டு தண்ணீர் சுண்டி சிக்கன் வெந்ததும் இறக்கி இதை தனியாகவும் சாப்பிடலாம், சாதத்துடனும் சேர்த்து சப்பிடலாம்..
டிஸ்கி: non-veg சாப்பிடாத நானே இதை சாப்பிட்டேன் என்றால் பாருங்களேன்!!!